< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்

சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவன் பலி

தினத்தந்தி
|
19 Aug 2023 12:15 AM IST

நன்னிலம் அருகே சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவன் பலியானான். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நன்னிலம்:

நன்னிலம் அருகே சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவன் பலியானான். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கூடைப்பந்து பயிற்சி

நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நீலாதாட்சி. இவர்களுடைய மகன் அன்புச்செல்வன் (வயது14).

வண்டாம்பாளை அருகே உள்ள தனியார் பள்ளியில் அன்புச்செல்வன் 9-ம் வகுப்பு படித்து வந்தான். அன்புச்செல்வன தினமும் காலையில் தனது வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு சைக்கிளில் சென்று கூடைப்பந்து பயிற்சி பெறுவது வழக்கம்.

லாரி மோதி மாணவன் பலி

நேற்று காலை வழக்கம் போல் திருவாரூர் விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சி பெற்று விட்டு சைக்கிளில் அன்புச்செல்வன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் வண்டாம்பாளை ஆர்ச் அருகே சென்றபோது பின்னால் திருவாரூரில் இருந்து வந்த லாரி, சைக்கிள் மீது மோதியது.

இதில் மாணவன் அன்புச்செல்வன், லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தான். உடனே அக்கம், பக்கத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அன்புச்செல்வனை பரிசோதித்த டாக்டர், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

டிரைவர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மயிலாடுதுறையை சேர்ந்த சுந்தரை (40) கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர். விளையாடி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த மாணவன், லாரி மோதி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்