சிவகங்கை
தமிழகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்-கி.வீரமணி பேச்சு
|தமிழகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என கி.வீரமணி கூறினார்.
தேவகோட்டை,
தமிழகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என கி.வீரமணி கூறினார்.
பொதுக்கூட்டம்
தேவகோட்டையில் திராவிட கழக பொதுக்கூட்டம் அரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வைகறை வரவேற்றார். சாமி திராவிட மணி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-
தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது சமூக நீதியை வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதனால் அக்கட்சியிலிருந்து அவர் வெளியேறி சமூக நீதிக்காக பாடுபட்டார். அவர் பாடுபட்டதில் வெற்றியும் அடைந்தார். ஆனால் இப்போது அகில இந்திய காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் 50 சதவீதம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பெரியார் வலியுறுத்திய சமூக நீதியை ஏற்று கொண்டுள்ளது. இதற்கு காரணம் பெரியார் என்ற மாமனிதர். நீதி கட்சி 1916-ல் இருந்தபோது தமிழகத்தில் படித்தவர்கள் 7 சதவீதமாக இருந்தது. இன்று 80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொள்கை மாறாது
இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. யார் எதிர் கருத்து உள்ளவர்களோ அவர்களை வைத்தே அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் எந்த ஆட்சி மாறினாலும் அடிப்படைக் கொள்கை மாறாது. அதுதான் திராவிட மாடல். தமிழகத்தில் இப்படி உயர்ந்து நிற்பது தான் சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. தமிழகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம். இதற்கு பெயர்தான் திராவிடமாடல் ஆட்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.