சென்னை அருகே துப்பாக்கி முனையில் ரவுடி கைது
|சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் துப்பாக்கி முனையில் ரவுடி சேதுபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் துப்பாக்கி முனையில் ரவுடி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்குன்றம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சேது என்கிற சேதுபதி, பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஆவடி ஆணையரகத்தின் அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக செங்குன்றம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு தனது கூட்டாளியுடன் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சேதுபதியை போலீசார் கைது செய்தனர். போலீசார் வந்ததை அறிந்த ரவுடி சேதுபதி ஆயுதங்களை பயன்படுத்தி தப்பிக்க முயன்றதாகவும், அப்போது போலீசார் துப்பாக்கி முனையில் சேதுபதியை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சேதுபதியிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை அங்கிருந்து வேன் மூலம் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.