சென்னை
புளியந்தோப்பில் குடிபோதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை - 5 பேர் கைது
|புளியந்தோப்பில் குடிபோதை தகராறில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம், வாசுகி நகரைச் சேர்ந்தவர் மாரி என்ற லொடாங்கு மாரி (வயது 40). பிரபல ரவுடியான இவர் மீது புளியந்தோப்பு, வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
புளியந்தோப்பு போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், இறைச்சி வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மாரி தனது வீட்டின் அருகே நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த கொருக்குப்பேட்டை மாரி (35), கார்த்திக் (32), லட்சுமணன் (32), மார்ட்டின் (28) மற்றும் சிலருடன் அமர்ந்து மது அருந்தினார். இதில் கொருக்குப்பேட்டை மாரி மற்றும் கார்த்திக் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இருவரும் புளியந்தோப்பு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.
அந்த வழியாக ரோந்து வந்த புளியந்தோப்பு போலீசார், மாரி உள்பட அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி எச்சரித்து அனுப்பினர். சிறிது நேரத்தில் மீண்டும் அதே இடத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். குடிபோதையில் திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது மாரியை அவரது குடும்பத்தினர் கண் எதிரேயே அவரது கூட்டாளிகள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய மாரியை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கொலை நடந்த இடத்தில் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலையான மாரியிடம், கொருக்குப்பேட்டை மாரி அடிக்கடி மாமூல் கேட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.
அப்போது கொலையான மாரியும், கொருக்குப்பேட்டை மாரியும் பானிபூரி வாங்கி ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி ஊட்டி விட்டபடி சாப்பிட்டனர். அப்போது மாரி, "தொடர்ந்து என்னிடம் மாமூல் வாங்கினால் நீயும் ஒரு நாள் வெட்டுப்பட்டு சாவாய்" என கொருக்குப்பேட்டை மாரியை எச்சரித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொருக்குப்பேட்டை மாரி, தன்னிடம் இருந்த கத்தியால் மாரியின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு நண்பர்களுடன் தப்பியதும், இதில் படுகாயம் அடைந்த மாரி உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த கொருக்குப்பேட்டை மாரி, கார்த்திக், மாரிமுத்து, லட்சுமணன் மற்றும் மார்ட்டின் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
கொலையான மாரி, கைதான கொருக்குப்பேட்டை மாரி மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்னிலையில் ஆஜராகி திருந்தி வாழ்வதாக கூறி பிரமாண உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.