< Back
மாநில செய்திகள்
பெரியபாளையம் அருகே பள்ளம் தோண்டிய போது ராக்கெட் வெடிகுண்டு சிக்கியதால் பரபரப்பு
மாநில செய்திகள்

பெரியபாளையம் அருகே பள்ளம் தோண்டிய போது ராக்கெட் வெடிகுண்டு சிக்கியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
5 Dec 2022 4:18 AM IST

மாடு கட்ட கம்பு நடுவதற்கு பள்ளம் தோண்டிய போது ராக்கெட் வெடிகுண்டு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த ஆவாஜிப்பேட்டை கிராமம் மேட்டு தெருவில் வசித்து வருபவர் குப்பன் (வயது 50). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வரும் கூலித்தொழிலாளி ஆவார்.

இவர், நேற்று காலை தனது மாடுகளை கட்டுவதற்காக வீட்டின் அருகே கடப்பாரையால் மண்ணை தோண்டி கம்பு நட்டார். அப்போது குழியில் ஏதோ வித்தியாசமான பொருள் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அவர், அந்த இடத்தை தோண்டி பார்த்தார். அந்த இடத்தில் சக்தி வாய்ந்த ராக்கெட் வெடிகுண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வெடிகுண்டு நிபுணர்கள்

இதுகுறித்து அவர் பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த ராக்கெட் வெடிகுண்டை மீட்டனர். பின்னர் அதை பத்திரமாக கொண்டு சென்று, அப்பகுதியில் உள்ள மைதானத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அதன் நடுவில் பத்திரமாக வைத்தனர்.

மேலும், இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் இன்று(திங்கட்கிழமை) அங்கு சென்று ராக்கெட் வெடிகுண்டை பறிமுதல் செய்து திருவள்ளூருக்கு கொண்டு சென்று பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என தெரிகிறது.

பெரும் பரபரப்பு

பரிசோதனையின் முடிவில் தான் அது எந்த வகையைச் சேர்ந்த வெடிகுண்டு? எவ்வளவு சக்தி வாய்ந்தது? என்பது தெரியவரும் என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2-ந் தேதி ஆவாஜிப்பேட்டைக்கு அருகே உள்ள மாளந்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பள்ளம் தோண்டிய போது ராக்கெட் லாஞ்சர் கிடைத்த நிலையில், அதனை வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பாக திருவள்ளூருக்கு கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று ராக்கெட் வெடிகுண்டு கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்