விருதுநகர்
மேற்கூரை வழியாக கடைக்குள் ஆடையில்லாமல் புகுந்த கொள்ளையன்
|அருப்புக்கோட்டையில் மேற்கூரை வழியாக கடைக்குள் ஆடையில்லாமல் கொள்ளையன் புகுந்தான்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில், திருச்சுழி சாலையில் ஜோதி முருகன் என்பவர் எண்ணெய் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் கடைக்கு வந்த போது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கல்லாப்பெட்டி உடைந்து சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதிலிருந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கடையில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர்.
அதில் மேற்கூரையை பிரித்து கடைக்குள் இறங்கிய மர்ம நபர் உடலில் ஆடை எதுவும் இல்லாமல் கடைக்குள் சுற்றி வருவதும், கேமராவை கண்டதும் தலையை கவிழ்த்து முகத்தை மூடுவதும் பதிவாகியுள்ளது. பின்னர் கேமராவின் மேல் துணியை போர்த்தி அந்த நபர் பணத்தை திருடிச்சென்றுள்ள காட்சி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.