வனப்பாதுகாப்பிற்காக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
|வேளாண் நிலங்கள் மற்றும் இயற்கை காடுகளில் மரம் நடும் பணிகளை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவுரைகள் வழங்கினார்.
சென்னை,
இன்று (17.11.2023) வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தலைமையில் வனப்பாதுகாப்பிற்காக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்தான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் கிண்டி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர், தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு & பசுமையாக்குதல் மற்றும் நபார்டு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொண்டார். வேளாண் நிலங்கள் மற்றும் இயற்கை காடுகளில் மரம் நடும் பணிகளை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். பழங்குடியின மக்கள் நலனுக்காக 150 கிராமங்களில் செயல்படுத்தப்படும் ஆரம்பதிட்டப்பணிகளை ஆய்வுசெய்தார்.
மனித - ஆனை முரண்பாடு 55 கிராமங்களின் "முரண்பாடு களைதல்" பணிகள் மீது ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஏலகிரி, ஏற்காடு, கூடலூர், கொல்லிமலை, ஒக்கேனக்கல், ஜவ்வாதுமலை மற்றும் உவியம்குகை ஆகிய இடங்களின் சுற்றுச்சூழல் மேம்பாடு பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.
நிலுவையில் உள்ள "முதல்வரின் முகவரி" சார்ந்த மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்குமாறு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் சம்பந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.