அமைச்சர் காந்தி தலைமையில் பள்ளி சீருடை வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
|பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் நடைபெற்றது.
சென்னை,
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் 07.06.2024 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2024-2025-ம் ஆண்டிற்கு சமூக நலத் துறைக்கு விநியோகிக்கப்பட வேண்டிய இரண்டு இணை, பள்ளி சீருடை துணிகள் விநியோக முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் கடந்த ஆண்டு சட்டமன்ற பேரவை அறிவிப்புகள் மீதான தொடர் நடவடிக்கை மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், துணிநூல் துறையில் செயல்படுத்தப்படும் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜவுளி நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் காந்தி கூறும்போது, "2024-2025-ம் ஆண்டிற்கு சமூக நலத்துறைக்கு விநியோகிக்கப்பட வேண்டிய 237.36 இலட்சம் மீட்டர் துணிகளில் நாளது தேதி வரையில் 149.65 இலட்சம் மீட்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சமூக நலத் துறைக்கு தினசரி துணிகள் விநியோகம் செய்யப்படும் அளவினை அதிகரித்து எதிர்வரும் 20.06.2024-க்குள் இரண்டு இணைக்கான துணிகள் முழுமையாக வழங்கப்படும். பொங்கல் 2025-க்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக, சேலைகள் மற்றும் வேட்டிகளின் மாதிரியினை உற்பத்தி செய்து அதன் முழுவிலை பட்டியல் விவரத்துடன் அரசுக்கு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்த நேரத்தில் மக்களை சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் மற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அமைச்சர் காந்தி அறிவுறுத்தினார்.