சென்னை
மீஞ்சூர் அருகே சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
|மீஞ்சூர் அருகே சுகாதார நிலையம் கட்டப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அடுத்த வன்னிப்பாக்கம் ஊராட்சியில் மேட்டுப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் நலன் கருதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினர் மூலம் சுகாதார நிதியில் ரூ.36 லட்சம் ஒதுக்கப்பட்டு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
பின்னர் இதன் திறப்பு விழா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. ஆனால் துணை சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் நர்சுகள் மற்றும் ஊழியர்கள் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இதனால் துணை சுகாதார நிலையம் மூடி கிடக்கிறது. இந்நிலையில் ரூ.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல்கள் சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்ட நிலையில் மது அருந்தும் இடமாக விளங்குகிறது. பொதுமக்களின் நலனுக்காக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் செயல்படாமல் இருப்பதை தவிர்த்து போதுமான டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் ஆகியோரை நியமனம் செய்ய வேண்டும், சுகாதாரத்தை பேணி காக்க உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.