தமிழக அரசு துறைகளின் காலிப்பணியிடங்கள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
|தமிழக அரசு துறைகளில் எத்தனை காலி பணி இடங்கள் உள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான புதிய தேர்வு அட்டவணையை வெளியிட்டதைத் தொடர்ந்து, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு அட்டவணை அமையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இந்த அட்டவணையை தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசு வெளியிட்டுள்ள 'செய்தி வெளியீடு', 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு விலை பத்து பைசா' என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. அதாவது, அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால், தனியார் நிறுவனங்களில் 1,063 முகாம்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசைப் பொறுத்த வரையில் அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதுதான் அதன் முதல் கடமை. அதைத்தான் இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதைச் செய்யாமல், தனியார் நிறுவனங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறுவது அரசின் திறமையின்மையை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, எத்தனை அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எத்தனை காலிப் பணியிடங்கள் பல்வேறு அரசு முகமைகள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன, நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக எத்தனைப் பணியிடங்களை நிரப்ப இயலாத சூழ்நிலை உள்ளது, வரும் ஆண்டுகளில் உத்தேசமாக எத்தனைப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறித்து ஒரு விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.
இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.