திருவள்ளூர்
நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது மோட்டார் சைக்கிள் மோதி ரேஷன் கடை ஊழியர் சாவு
|நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது மோட்டார்சைக்கிள் மோதி ரேஷன் கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ரேஷன் கடை ஊழியர் பலி
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). இவர், ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று காலை இவர், வடபெரும்பாக்கம் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (61). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று ஒரு பெண்ணை சவாரி ஏற்றி கொண்டு பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். மதுரவாயல் அடுத்த வானகரம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.
இதில் ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கியது. இதில் படுகாயம் அடைந்த சிவகுமார் பரிதாபமாக இறந்தார். ஆட்டோவில் வந்த பெண், காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.