சென்னை
பழைய வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை
|சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் குமார் என்ற கருப்பு குமார் (வயது 53). ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது.
இவர், நேற்று காலை 10 மணி அளவில் பழைய வண்ணாரப்பேட்டை ஆரணி கெங்கன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், குமாரை வழிமறித்து, தாங்கள் மறைத்து வைத்து இருந்த பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குமார், மதியம் 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையான குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
2013-ம் ஆண்டு பிரபல ரவுடி வெங்கடா என்பவர் கொலை வழக்கில் ரவுடி குமார் சம்பந்தப்பட்டு இருந்தார். அந்த முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக வெங்கடாவின் ஆதரவாளர்கள் குமாரை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இ்ந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.