< Back
மாநில செய்திகள்
கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி திட்டம் விரைவில் தொடங்கப்படும்- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி திட்டம் விரைவில் தொடங்கப்படும்- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

தினத்தந்தி
|
15 Sept 2022 3:36 PM IST

கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று பூங்கா அதிகாரி தெரிவித்தார்.

விலங்குகள் இருப்பிடங்கள்

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவில் உள்ள 7 முக்கிய விலங்குகள் இருப்பிடங்கள் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவை பார்வையாளர்கள் பார்க்க தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.

இதில் மூடப்பட்டிருந்த சிறுவர் பூங்கா மற்றும் இரவு நேர விலங்குகள் இல்லம், பாம்புகள் இல்லம், உட்சென்று காணும் பறவைகள் கூடம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் அருங்காட்சியகம் போன்றவை படிப்படியாக பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சிங்கங்களை பார்வையிடும் சவாரி திட்டம்

ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பூங்காவில் மூடப்பட்டுள்ள சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் சவாரி திட்டம் இன்னும் செயல்படுத்த வில்லை. இதனால் பார்வையாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

கொரோனா தொற்று காலகட்டத்தில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் சில சிங்கங்கள் உயிரிழந்தன. இதனால் பேட்டரி வாகனத்தின் மூலம் பார்வையாளர்கள் நேரடியாக சிங்கங்கள் உலாவிட பகுதிகளுக்கு சென்று பார்க்கும் சவாரி திட்டம் மற்றும் அதன் அருகே உள்ள மான்களை பார்வையிடும் சவாரி திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

தற்போது அதனை திறக்க கோரி தொடர்ந்து பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களிடமிருந்து கோரிக்கைகள் வருவதன் காரணமாக இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்