< Back
மாநில செய்திகள்
விழுப்புரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம்

தினத்தந்தி
|
12 Jun 2023 6:45 PM GMT

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக விழுப்புரத்தில், கடும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் கீதாஜீவன், பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழுப்புரம் நகராட்சி கீழ்பெரும்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 6 மாதம் முதல் 6 வயது வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவிற்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பழனி வரவேற்றார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அமுதவள்ளி, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி டாக்டர் லட்சுமணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

கடுமையான ஊட்டச்சத்து

விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விழுப்புரத்தில் தான் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 36 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1 லட்சத்து 11 ஆயிரம் குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை உறுதி செய்திடும் வகையில் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டானது தொடர்ந்து 56 நாட்கள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் உடல் எடை மற்றும் ஆரோக்கியம் மேம்படும். எனவே தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் இதனை வழங்கி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நல்லாட்சி

முன்னதாக அமைச்சர் பொன்முடி பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வழியில் நல்லாட்சி புரிந்துவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி அங்கன்வாடி மைய குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருந்திடும் வகையில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்க உத்தரவிட்டதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 4,348 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படுகிறது என்றார்.

தாயுள்ளத்தோடு

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், ஒரு குழந்தையின் நலனில் தாயிற்கு அடுத்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு குழந்தைகள் நலனில் அக்கறைக்கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் வருங்கால சந்ததிகளான இக்குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்திடும் வகையிலும், வயதுக்கேற்ற உடல் ஆரோக்கியம் அடைந்திடும் வகையிலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவார்கள் என்றார்.

அதனை தொடர்ந்து பானாம்பட்டு கிருபாலாயா ஒருங்கிணைந்த சிறுவர் மற்றும் அன்பு முதியோர் இல்லத்தில் அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்கியுள்ள முதியோர்களிடம் இல்லத்தில் தங்களுக்குண்டான வசதிகள், உணவுகள் மற்றும் மருத்துவ தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் முண்டியம்பாக்கத்திலுள்ள சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகரமன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, ராஜலட்சுமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் வாசன், தயாளன், ஓம் சிவசக்திவேல், அமுதா ரவிக்குமார், சொக்கலிங்கம், யோகேஸ்வரி, சச்சிதானந்தம், நகரமன்ற துணைத்தலைவர் சித்திக் அலி, சமூகநல அலுவலர் ராஜாம்மாள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் அன்பழகி உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்