செங்கல்பட்டு
புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு; செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்
|புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு,
நிதி ஒதுக்கீடு
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு விருது வழங்கிடும் திட்டமானது அறிவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கிடும் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறும் இந்த திட்டதிற்கு புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சமும், புதிய வேளாண்மை கருவி கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சமும் என வேளாண்மை துறைக்கு இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.2 லட்சம் மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது.
இந்த திட்டம் 2022-23 நடப்பாண்டுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவில் குழு அமைத்து, இந்த திட்டத்தை நடைமுறைபடுத்திட உள்ளது. இந்த திட்டத்தில் தகுதியுடைய பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இந்த திட்டத்தில் பங்குபெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை உழவன் செயலி மூலம் பதிவு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும். பதிவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
சொந்த கண்டுபிடிப்பாக...
பங்கேற்பாளர் தனது சாதனை குறித்த விளக்கம் மற்றும் விவரங்களுடன் மாவட்ட அளவிலான குழுவிடம், செயல்விளக்கங்கள். எந்திரங்கள், புகைப்படம் அல்லது வீடியோ போன்றவற்றுடன் விளக்க வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயியின் கண்டுபிடிப்பானது அவரது சொந்தக் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
இதற்கு முன்னர் இந்த கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் வேறு எந்தபோட்டியிலும் கலந்து கொண்டு பரிசு எதுவும் பெற்றதாக இருக்கக் கூடாது.
விருதுக்கு சமர்ப்பிக்கப்படும் எந்திரம் வேறு ஒரு தனி நபருடைய அல்லது ஒரு நிறுவனத்தின் கண்டுபிடிப்பின், தயாரிப்பின் அசலாகவோ, சாயலாகவோ, மேம்படுத்தப்பட்டதாகவோ இருக்கக்கூடாது இதற்கான குறிப்புரை வேளாண் என்ஜினீயரிங் துறையின் மூலம் பெறப்பட வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் உள்ளூர் தொழில்நுட்பமானது அனைத்து விவசாயிகளும் எளிதில் கடைபிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் அது போல உள்ளூர் கண்டுபிடிப்பானது விவசாயிகளால் எளிதில் உபயோகப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட விவசாயிகளின் தொழில் நுட்ப கண்டுபிடிப்பை மதிப்பாய்வு செய்து இதற்கான குறிப்புரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடம் பெறப்பட வேண்டும்.
செலவினத்தை குறைக்க...
போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் உள்ளூர் தொழில்நுட்ப கண்டு பிடிப்பு விவசாயிகளின் வேளாண்மை செலவினத்தைக் குறைக்ககூடியதாகவும், விலை குறைவானதாகவும், அதிக விளைச்சலை, தரக்கூடியதாகவும் பயன்படுத்தக்கூடிய கருவியாகவும் இருக்க வேண்டும்.
வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குனர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.