< Back
மாநில செய்திகள்
வேன் கட்டணம் கட்டவில்லை என்று 2-ம் வகுப்பு மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்த தனியார் பள்ளி
திருச்சி
மாநில செய்திகள்

வேன் கட்டணம் கட்டவில்லை என்று 2-ம் வகுப்பு மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்த தனியார் பள்ளி

தினத்தந்தி
|
1 July 2022 2:26 AM IST

வேன் கட்டணம் கட்டவில்லை என்று 2-ம் வகுப்பு மாணவனுக்கு தனியார் பள்ளி மாற்றுச்சான்றிதழ் கொடுத்தது.

முசிறி:

முசிறி அருகே உள்ள வெள்ளூர்சாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன் சித்தீஸ்வரன் முசிறியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். இதற்காக பள்ளி கட்டணமாக கடந்த 20-ந் தேதியன்று ரூ.7 ஆயிரத்து 500-ஐ சித்தீஸ்வரனின் பெற்றோர் கட்டியுள்ளனர். ஆனால் வேனுக்கான கட்டணம் ரூ.400 கட்ட காலதாமதம் ஆனதாக கூறி, கடந்த செவ்வாய்க்கிழமையன்று சித்தீஸ்வரனை வேனில் ஏற்ற டிரைவர் மற்றும் உதவியாளர் மறுத்துள்ளனர். இதையடுத்து உறவினர் கூறியதன்பேரில் சித்தீஸ்வரனை வேனில் ஏற்றிச்சென்றுள்ளனர்.

மேலும் இது குறித்து சித்தீஸ்வரனின் பெற்றோர் பள்ளிக்கு நேரில் சென்று தாளாளரிடம் முறையிட்டுள்ளனர். அப்போது அவர், 400 ரூபாய் பணம் கட்ட முடியாத உங்களால் எப்படி மேற்கொண்டு கட்டணம் செலுத்த முடியும் என்று தரக்குறைவாக பேசி, சித்தீஸ்வரனின் மாற்றுச்சான்றிதழை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி, அதனை சித்தீஸ்வரனின் பெற்றோர் முகத்தில், பள்ளியின் தாளாளர் வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலைச்செல்வி முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்துள்ளார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு அருள்மணி இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது சித்தீஸ்வரனின் பெற்றோர், அந்த பள்ளியில் எங்களது மகனை படிக்க வைக்க விரும்பவில்லை. மேலும் நாங்கள் செலுத்திய பணம் அனைத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். பள்ளியின் தாளாளரை மாற்ற வேண்டும். எங்களை போன்ற பல பெற்றோர்கள் வெளியில் சொல்ல முடியாமல் இருந்து வருகிறார்கள், என்று கூறியுள்ளனர்.

மேலும் மாவட்ட கல்வி அலுவலர் பாரதி விவேகானந்தனிடம் பெற்றோர் சார்பாகவும் மற்றும் முசிறி நகர பா.ஜ.க. சார்பாகவும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்