வேலூர்
தனியார் வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
|வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இன்று நடந்தது.
ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குனர் அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி முகாமில் முதற்கட்டமாக தேர்வான 115 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழக அரசு வேலை வாய்ப்பு முகாமிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பு முகாம் வேலூர் மாவட்டத்தில் அதிகளவு நடத்தப்படுகிறது.
அரசு வேலை கடினமானது
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களது குடும்ப பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இதன்மூலம் குடும்பம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும். கடந்த காலங்களில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவது கிடையாது.
அரசு வேலை என்பது மிகவும் கடினமானது. போட்டி தேர்வுகள் எழுத வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே அரசால் தேர்வு செய்யப்படுகிறார்கள். அரசு வேலைக்கு பட்டதாரிகள் அவர்களுடைய தகுதியை வளர்த்து கொண்டால் மட்டும் தான் மற்றவர்களுடன் போட்டி போட முடியும்.
எந்த வேலையும் எளிதாக கிடைப்பது இல்லை. இங்கு நடக்கும் முகாமில் தனியார் நிறுவனங்களுக்கு 23 ஆயிரம் பேர் வேலைக்கு தேவைப்படுகிறது.
உங்களுக்கு வேலை வாய்ப்பு பெறும் தகுதி இருந்தால் போட்டி தேர்வு இன்றி உங்களை வேலையில் அமர்த்தி கொள்ள தனியார் நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன. வேலை வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
365 பேருக்கு பணி நியமன ஆணை
இதில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை உதவி இயக்குனர் காந்தி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், ஆதிதிராவிட நல அலுவலர் ராமச்சந்திரன், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
102 நிறுவனங்கள் கலந்து கொண்ட தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 1,643 ஆண்கள், 1,025 பெண்கள், 27 மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,695 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களில் 365 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் சார்பில் 1,104 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தகுதியுள்ள நபர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.