சென்னை
லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன மேலாளர் பலி
|மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன மேலாளர், லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 65). இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்னீர்குப்பம் அருகே மேம்பாலத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றார். மேம்பாலத்தில் சாலை அமைக்கும் பணிக்காக ஏற்கனவே போடப்பட்டு இருந்த தார் சாலை சுரண்டி எடுக்கப்பட்டு இருந்தது.
இது தெரியாமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மேகநாதன், சாலையில் நிலைதடுமாறி விழுந்தார்.
அப்போது அவர் மீது லாரி ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய மேகநாதன், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.இதுபற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.