திருவள்ளூர்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி; டிரைவர் கைது
|பொதட்டூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா வாணி விலாசபுரம் காலனியை சேர்ந்தவர் பில்லா (வயது 50). இவரது மகன் சின்னதுரை (23). இவர் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் இவர் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். வழியில் கோரகுப்பம் என்ற பகுதியில் வரும்போது ஆந்திர மாநிலம் நெல்வாய்லில் உள்ள தனியார் சர்க்கரை அலையில் இருந்து கரும்பு சக்கயை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வேகமாக வந்த லாரி இவர் மீது மோதியது.
பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சின்னதுரை படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை பில்லா பொதட்டூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் நாமக்கல்லை சேர்ந்த பொன்னுசாமி (52) என்பவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சின்னதுரைக்கு மனைவியும், 8 மாத கைக்குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.