திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
|கும்மிடிப்பூண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அடுத்த வெங்கமேட்டில் உள்ள வள்ளூவர் தெருவை சேர்ந்தவர் லிங்கேஷ் (வயது 22). இவர் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் நண்பர்களுடன் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் லிங்கேஷ் வந்து கொண்டிருந்தார். அப்போது சின்ன ஒபுளாபுரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் வரும்போது அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் லிங்கேஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லிங்கேஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் விஷ்ணு (வயது 23). இவருக்கு கடந்த 9-ந்தேதி மாலை வயிற்று வலி ஏற்பட்டது. எனவே, ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் அன்று நள்ளிரவில் வெளிேய வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து நேற்று அவரது தந்தை கோபால் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.