திருவள்ளூர்
தாறுமாறாக ஓடிய தனியார் நிறுவன பஸ் ஒட்டலுக்குள் புகுந்தது; 31 பேர் காயம்
|தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு தாறுமாறாக ஓடிய தனியார் நிறுவன பஸ் ஒட்டலுக்குள் புகுந்தது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 30 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று நேற்று திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருவள்ளூரை சேர்ந்த காளிமுத்து (வயது 39) ஓட்டி சென்றார். பஸ்சில் 30 பணியாளர்கள் இருந்தனர்.
நேற்று காலை திருவள்ளூர் அடுத்த தொடுகாடு தனியார் ஆஸ்பத்திரி அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக இடது புறமாக திரும்பும் போது எதிர்பாராத விதமாக சாலை ஓரமிருந்த ஓட்டலுக்குள் பஸ் புகுந்தது. ஓட்டல் மூடப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இதில் அந்த பஸ்சின் முன் பக்கம் நொறுங்கியது. பஸ் டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். உள்ளே இருந்த 30 பணியாளர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனால் திருவள்ளூர் -ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.