திருவள்ளூர்
வழிப்பறி வழக்கில் கைதானவர் புழல் ஜெயில் கைதி தப்பி ஓட்டம்
|வழிப்பறி வழக்கில் கைதான வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு கொண்டுவரும் வழியில் தப்பி ஓடினார்.
திருவள்ளூர் அடுத்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரெட்டைமலை சீனிவாசன் (வயது 24). இவர் கடந்த 2018-ம் ஆண்டு வழிப்பறி வழக்கு ஒன்றில் திருவேற்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து புழல் ஜெயில் இருந்து வெளியில் வந்தநிலையில், தொடர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், இவரை பிடிக்க திருவேற்காடு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்ததையடுத்து, போலீசார் இவரை தீவிரமாக தேடிவந்தனர். இதையடுத்து பதுக்கி இருந்த அவரை நேற்றுமுன்தினம் கைது செய்த போலீசார் திருவேற்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அங்கிருந்து புழல் ஜெயில் அருகே 9 மணி அளவில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது 2 போலீஸ்காரர்கள் உடன் வந்த நிலையில், அவர்களிடம் ரெட்டைமலை சீனிவாசன் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என கூறியதால் அவரை சாலையோரத்தில் இருந்த கழிவறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சென்ற நிலையில் போலீஸ்காரரை தள்ளிவிட்டு ரெட்டைமலை சீனிவாசன் திடீரென ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். அனால் அவர் இருட்டான பகுதிக்கு சென்று தலைமறைவானதால் பிடிக்க முடியவில்லை. இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்குப்பதிவு செய்து தப்பிய இரட்டைமலை சீனிவாசனை தேடி வருகிறார்.