பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட முன்பகை... அடுத்தடுத்து 3 பேர் கொல்லப்பட்ட கொடூரம்
|இச்சம்பவம் தொடர்பாக அண்ணன், தம்பி மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட முன்பகையால், அடுத்தடுத்து 3 பேர் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகரை சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்களான வினீத், விநாயகமூர்த்தி ஆகியோர், கடந்த 2017-ம் ஆண்டு கூடுவாஞ்சேரியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த போது, விநாயகமூர்த்திக்கும், அதே பள்ளியில் படிக்கும் கோபாலகிருஷ்ணனுக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன் வினீத்தும், விநாயகமூர்த்தியும் சேர்ந்து, கோபாலகிருஷ்ணனை தாக்கியதாக தெரிகிறது. இதில், கடும் கோபத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன், வினீத்தை தீர்த்து கட்ட எண்ணிய நிலையில், அவரது நண்பர் கண்ணியப்பனிடம் வினீத் எங்கே என கேள்வி கேட்டு தாக்கிய போது, கண்ணியப்பன் கத்தியால் கோபாலகிருஷ்ணனை குத்தியதில், அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த வினீத், தன்னை கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்த, விக்கி, மற்றும் சந்தோஷை 7 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து, கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், இருவரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வினீத், விநாயகம் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.