திருவள்ளூர்
தாறுமாறாக ஓடிய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு பலி
|தாறுமாறாக ஓடிய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு பலியானார்.
கார்- ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 31-ந்தேதி ஆட்டோ பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் தேரடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை திருவள்ளூர் அடுத்த எறையூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சத்யா (21) என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த ஆட்டோவில் திருவள்ளூர் அடுத்த சித்தம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சி ராணி (40), சித்தம்பாக்கத்தை சேர்ந்த நான்சி (32) மற்றும் மேன்சி (14), யாபேஸ் (3), கிதியோன்(1) ஆகியோர் இருந்தனர். அந்த ஆட்டோ திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் அந்த ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்து நொறுங்கியது. ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர் சத்யா உட்பட 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சாவு
மேலும் அந்தக் கார் மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் அடுத்த ஆவடி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரியும் திருவள்ளூர் அடுத்த பாண்டூர் கிராமத்தை சேர்ந்த அப்பன் செல்வன் (வயது 46) மீதும் மோதியதால் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார். இதில் அந்த காரின் முன் பகுதி நொறுங்கியது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயமடைந்த போலீஸ் ஏட்டு அப்பன் செல்வன் உள்பட 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி்க்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில் அப்பன் செல்வன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீஸ் ஏட்டு அப்பன் செல்வன் நேற்று சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாறுமாறாக காரை ஓட்டி வந்த திருவள்ளூர் ம.பொ.சி தெருவை சேர்ந்த ரோகித் அஸ்வா (வயது 20) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.