சேலம்
விபத்தில் காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
|விபத்தில் காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (வயது 57). இவர், சேலம் மாநகர வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சர்வீஸ் சாலை இணையும் இடத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், சிவசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவாமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சிவசாமி உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.