வேலூர்
காவல் உதவி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
|வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காவல் உதவி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, சித்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பயணிகள் வருகின்றனர். இதனால் புதிய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
பஸ் நிலையத்தில் பயணிகளின் செல்போன் திருட்டு போவதாக புகார்கள் எழுந்தது. மேலும் அங்கு பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. அதிக பயணிகள் வந்து செல்லும் பஸ் நிலையத்தில் காவல் உதவி மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு காவல் உதவி மையம் கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தும் பல வாரங்கள் ஆகியும் காவல் உதவி மையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். கட்டப்பட்ட காவல் உதவி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.