மெரினா கடற்கரையில் குளிக்கவரும் பொதுமக்களுக்கு போலீசார் ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை
|மெரினா கடற்கரையில் குளிக்கவரும் பொதுமக்களுக்கு போலீசார் ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
சென்னை,
தமிழகத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டம் இன்று களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்ப்பரித்து திரண்டனர். மக்கள் குடும்பம் குடும்பமாக கடற்கரை, பூங்காக்களுக்கு சென்று உற்சாகமடைந்தனர்.மெரினா கடற்கரையில் இன்று காலை 9 மணியளவில் இருந்தே மக்கள் கூட தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. பிற்பகலில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மெரினா கடற்கரையில் கூட்ட நெரிசலால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
மெரினாவில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்ததால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 15 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களிலும் தலா 3 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலில் இறங்கி மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் நன்கு நீச்சல் தெரிந்த 140 வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
மேலும் மெரினா கடற்கரையில் குளிக்கவரும் பொதுமக்களுக்கு போலீசார் ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.