கிருஷ்ணகிரி
தேர்வு எழுதி விட்டு தந்தைக்கு இறுதிசடங்கு செய்த பிளஸ்-2 மாணவர்
|ஊத்தங்கரை:-
ஊத்தங்கரை அருகே தேர்வு எழுதி விட்டு தந்தைக்கு இறுதி சடங்கு செய்த பிளஸ்-2 மாணவரால் அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி கீழ்காலனியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருடைய மகன் ஜெகத் (17). கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் பரீட்சை எழுதினான்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவருடைய தந்தை கோட்டீஸ்வரன் உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் ஜெகத் துக்கம் அடைந்து அழுத நிலையில் சோகத்துடன் இருந்தான்.
தேர்வு எழுதினான்
நேற்று ஆங்கிலத்தேர்வு நடந்தது. உடனே ஊர் நாட்டாண்மை வெங்கடேசன், தர்மகர்த்தா சுரேஷ் மற்றும் மாணவனின் உறவினர்கள் ஜெகத்தை சமாதானம் செய்து ஆங்கிலத்தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்து வந்தனர். அந்தநேரம் ஜெகத்தின் தந்தை உடல் அடக்கம் செய்யப்படாமல் உறவினர்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.
காலையில் ஜெகத் சோகத்துடன் அமர்ந்து ஆங்கிலத் தேர்வை எழுதினான். அதன்பிறகு அவனை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு தந்தையின் உடலுக்கு ஜெகத் இறுதிசடங்கு செய்தான். அதன்பிறகே ஜெகத்தின் தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.