திருவாரூர்
'தமிழக கவர்னரே வெளியேறு' இயக்கம் நடத்த திட்டம் - கி.வீரமணி
|'தமிழக கவர்னரே வெளியேறு' என்ற முழக்கத்தை முன்வைத்து இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.
கி.வீரமணி பேட்டி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தி.க. தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது கடமையை மறந்து விட்டு அரசியல்வாதியாக செயல்படுகிறார். மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். எனவே 'தமிழக கவர்னரே வெளியேறு' என்ற முழக்கத்தை முன் வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மக்கள் இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் நோக்கம் அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மாநில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான்.
மிகப்பெரிய மாற்றம்
பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் 2-ம் கட்ட கூட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேர்தல் வாக்குறுதிகளை 5 ஆண்டு காலத்துக்குள் தி.மு.க. அரசு நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தி.க. மாநில அமைப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன், மாவட்ட தலைவர் சித்தார்த்தன், ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வம், செயலாளர் ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.