கன்னியாகுமரி
அட்டகாசத்தில் ஈடுபடும் புலிைய மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்
|பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபடும் புலிைய மயக்க ஊசி போட்டு பிடிக்க கால்நடை டாக்டர் குழுவினர் சிற்றார் பகுதிக்கு வருகிறார்கள்.
குலசேகரம்,
பேச்சிப்பாறை அருகே அட்டகாசத்தில் ஈடுபடும் புலிைய மயக்க ஊசி போட்டு பிடிக்க கால்நடை டாக்டர் குழுவினர் சிற்றார் பகுதிக்கு வருகிறார்கள்.
புலி அட்டகாசம்
பேச்சிப்பாறை அருகே உள்ள சிற்றாறு அரசு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைக்கல் பழங்குடி குடியிருப்பு போன்ற இடங்களில் கடந்த 2 வாரமாக ஒரு புலி புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அந்த புலி இதுவரை 6 ஆடுகள், ஒரு பசுமாடு ஆகியவற்றை வேடையாடி கொன்றுள்ளது. ஒரு பசுமாடு, ஒரு ஆடு ஆகியவை காயமடைந்துள்ளன. மேலும் 2 வீட்டு வளர்ப்பு நாய்களையும் காணவில்லையென கூறப்படுகிறது.
புலியைப் பிடிக்க வனத்துறையினர் இரவு பகலாக அந்த பகுதியில் முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில் வளாகத்தில் ஆடு மாடுகள்
இந்தநிலையில் வீடுகளில் உள்ள கொட்டகைகளில் இரவு நேரத்தில் கட்டி வைக்கப்படும் ஆடு, மாடுகளை புலி அடித்து வருவதால் அவற்றை பாதுகாக்க அனைத்து கால்நடைகளையும் கோவில் வளாகத்தில் ஒன்றாக கட்டி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கால்நடைகள் கட்டி வைக்கப்பட்டு வருகின்றன. கோவில் வளாகத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் உள்ளதால் புலி உள்ளே புகுந்து ஆடு, மாடுகளை அடிப்பதற்கு வாய்ப்பிலை என கூறப்படுகிறது.
அதே வேளையில் புலி வழக்கமாக வந்து ஆடுகளை வேட்டையாடும் இடத்தில் ஆட்டுக் கொட்டகை வடிவில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மயக்க ஊசி
இந்தநிலையில் புலியை மறைந்திருந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலய வன கால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் முதுமலை சரணாலய வன கால்நடை டாக்டர் கலைவாணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இங்கு வரவுள்ளனர். இதுபோல் புலியைப் பிடிப்பதில் பயிற்சி பெற்ற எலைட் படையினரும் இங்கு வரவுள்ளனர்.
இதுகுறித்து களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர் கூறியதாவது:-
கடந்த 15 நாட்களுக்கு மேலாக புலியைப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது புலியை பிடிக்கும் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. பொதுமக்களுக்கும் நன்றாக ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக அங்குள்ள ஆடு, மாடுகள் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் வழக்கம் போல் ஆடுகளைத் தேடி பழைய இடத்தில் புலி நிச்சயமாக வரும். அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள கூண்டில் சிக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் புலியை பிடிக்க டிரோன் ேகமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.