< Back
மாநில செய்திகள்
காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
மாநில செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தினத்தந்தி
|
14 Feb 2023 2:31 AM IST

காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் வாலிபர் பெட்ரோல் குண்டு வீசினார்.

மதுரை,

மதுரையில் கம்னியூஸ்டு கட்சி பிரமுகர் ஒருவரின் மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை அனுப்பானடியை சேர்ந்த மணிரத்னம் என்ற வாலிபர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தந்தையிடம் தெரிவித்தார்.

இதுபற்றி மணிரத்னத்தின் குடும்பத்தினரிடம், மாணவியின் தந்தை முறையிட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அவர் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மணிரத்னத்தை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அங்கிருந்து வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு சென்று விட்டனர்.

மாணவி வீட்டில் குண்டு வீச்சு

பின்னர் ஜாமீனில் வெளிவந்த மணிரத்னம் மீண்டும் மாணவியை பின்தொடர்ந்து அவரை காதலிப்பதாக தொந்தரவு செய்தார். ஆனால் மாணவி காதலை ஏற்க மறுத்தார். அதனால் ஆத்திரமடைந்த மணிரத்னம் தனது நண்பர் பார்த்தசாரதியுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று மாணவியின் வீட்டிற்கு வந்தார். பின்னர் பாட்டிலில் நிரப்பியிருந்த 2 பெட்ரோல் குண்டை வீட்டின் முன்பு வீசினார். அதில் ஒன்று வீட்டின் சுவற்றில் விழுந்து பற்றி எரிந்தது. மற்றொன்று கீழே விழுந்து வெடிக்கவில்லை. அப்போது வீட்டின் வெளியே யாரும் இல்லை. இந்த சம்பவத்தால் அங்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

இதைதொடர்ந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

2 பேர் கைது

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தெப்பக்குளம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான மணிரத்னம் மீது ஏற்கனவே கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இன்று காதலர் தினம் என்பதால் தன் காதலை இன்று ஏற்க வேண்டும், இல்லை என்றால் பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பதற்காக மணிரத்னம் பெட்ரோல் குண்டை வீசி மாணவியை மிரட்டி இருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்