< Back
மாநில செய்திகள்
பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... வேலை கொடுக்காததால் வாலிபர் ஆத்திரம்....!
மாநில செய்திகள்

பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... வேலை கொடுக்காததால் வாலிபர் ஆத்திரம்....!

தினத்தந்தி
|
30 Jan 2023 9:17 PM IST

பரமக்குடியில் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இதில் நேற்று இரவு கைலி சட்டை அணிந்து வந்த நபர் திடீரென கையில் இருந்த பெட்ரோல் குண்டை பெட்ரோல் பங்க் மீது வீசி உள்ளார். அது வெடிப்பு சிதறி தீ பற்றி எரிந்தது. அதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் பதறி அடித்து ஓடி வந்து தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்பு பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை போலீசார் எடுத்து அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் பரமக்குடி அரசு ஐ.டி.ஐ. எதிரில் வசித்து வரும் கணேசன் (35) என்பது தெரிய வந்தது. உடனே நகர் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த வாலிபர் பலமுறை அந்த பெட்ரோல் பங்கில் சென்று வேலை கேட்டுள்ளதாகவும் அவர்கள் வேலை கொடுக்காததால் ஆத்திரத்தில் அவர்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்