திருச்சி
28 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
|28 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தபோது கள்ளிக்குடி மார்க்கெட் வாசலில் நின்ற ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஒரு வெள்ளை சாக்குப்பையுடன் தப்பி செல்ல முயன்றார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கண் தீனதயாள் நகரை சேர்ந்த நைனா முகமது (வயது 50) என்பதும், மொத்தமாக கஞ்சா வாங்கி பதுக்கி வைத்து சில்லரை வியாபாரிகளுக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
*திருச்சி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 17 பேரை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மணப்பாறை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பெண் போலீசார் தொட்டியம், துவாக்குடி, இனாம்குளத்தூர், மணிகண்டம், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புத்தாநத்தத்தில் 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலிபருக்கு கத்திக்குத்து
*வையம்பட்டியை சேர்ந்த விஜயகுமாரிடம்(38) சடையம்பட்டியைச் சேர்ந்த சரவணன்(34) மது வாங்கிக் கொடுக்கக்கூறி தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த விஜயகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சரவணனை வையம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
ரெயில் மோதி பெண் பலி
*சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் திருவானைக்காவல் பாலத்தை கடந்தபோது, அங்கு 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது ரெயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
*வெவ்வேறு சம்பவத்தில் 2 பேரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த காஜாமலை பகுதியை சேர்ந்த ரவுடி ஆல்வின் ஜோஷ்வா, பாலக்கரை தர்மநாதபுரம் பகுதியை சேர்ந்த ரவுடி தாமஸ் ஆண்டனி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.
*திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த மனோகரன்(58), திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் வசித்து வந்த வீட்டிற்கு ஒரு மாதம் வாடகை கொடுக்கவில்லை என்றும், இது தொடர்பாக வீட்டின் உரிமையாளருக்கும், மனோகரனுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனோகரன் நேற்று காலை வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.