மொபட்டில் சென்ற கோர்ட்டு ஊழியர்: எமனாக வந்த மாடு... நொடியில் நேர்ந்த கொடூரம்
|நெல்லையில் மாடு முட்டி சாலையில் விழுந்த கோர்ட்டு ஊழியர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
நெல்லை,
நெல்லை பேட்டை தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதராஜ் (வயது 58). இவர் நெல்லை மாவட்ட முதன்மை கோர்ட்டில் இளநிலை கட்டளை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டார்.
வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்றபோது, அங்கு 4 வழிச்சாலை பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து ஒரு பாதையில் மட்டும் திருப்பி விடப்பட்டிருந்தது. அதில் எதிரெதிரே வாகனங்கள் கடந்து சென்றன.
அந்த ரோட்டில் வேலாயுதராஜ் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையில் 2 மாடுகள் ஒன்றுக்கு ஒன்று முட்டியது. இதில் ஒரு மாடு, மற்றொரு மாட்டையும், வேலாயுதராஜையும் வேகமாக மொபட்டுடன் சேர்த்து முட்டி தள்ளியது. இதனால் வேலாயுதராஜ் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
அப்போது எதிரே நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பஸ் சக்கரத்தில் வேலாயுதராஜ் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். வேலாயுதராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாடு முட்டியதில் சாலையில் விழுந்த கோர்ட்டு ஊழியர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த விபத்து காட்சிகள் அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.