மதுரை
மதுரை கடச்சனேந்தல் அருகே மீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்த கிளி- பக்தர்கள் பரவசம்
|மதுரை கடச்சனேந்தல் அருகே மீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்த கிளியால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
"கொண்டை முடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சுகம் மொழி உமையாள்
வீற்றிருந்தாள்-அந்த அழகிய
மாநகர் மதுரையிலே...!"
என்ற பக்திப்பாடல் மிகவும் பிரபலமானது.மீனாட்சி அம்மன் என்றால் கையில் வைத்திருக்கும் கிளியும் ஓர் அடையாளம்.மதுரை மட்டுமின்றி மீனாட்சி அம்மனுக்கு பல்வேறு இடங்களில் கோவில்கள் உண்டு. அதில் ஓர் கோவில்தான் மதுரை அருகே கடச்சனேந்தல் பகுதியில் ஜாங்கிட் நகரில் அமைந்துள்ள மீனாட்சி-சுந்தரேசுவரர், செல்வ விநாயகர் கோவில் ஆகும். அப்பகுதி மக்கள் ஏராளமானோர் இக்கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். நேற்று மாலையில் பக்தர்கள் வழிபட்டு கொண்டிருந்தபோது, திடீரென பச்சைக்கிளி ஒன்று பறந்து வந்து கோவில் வளாகத்தில் அமர்ந்தது. சிறிது நேரத்தில் மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் பறந்து அம்மன் விக்ரகத்தின் வலது தோளில் அமர்ந்தது.
மீனாட்சி அம்மன் கிளியை கையில் வைத்திருப்பவர். அதே போன்று இந்த கிளியும் வந்து அமர்ந்தது பக்தர்களை பரவசம் அடையச் செய்தது. ஏராளமானோர் ஆர்வமாக வந்து பார்த்து அம்மனை தரிசித்தனர். செல்போன்களில் படம் எடுத்தனர். கோவில் பூசாரி தீபாராதனை காண்பித்ததும் கிளி பறந்து சென்றது.
சற்று நேரத்தில் மீண்டும் வந்தது. பின்னர், வெளியே செல்வதும், அம்மன் சிலை மீது அமருவதுமாக இருந்தது. இரவில் நடை அடைக்கப்பட்ட பின்பும் அந்த கிளி அப்பகுதியிலேயே இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.