நீலகிரி
வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்
|கோத்தகிரியில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். பொருளாளர் மரியம்மா, துணைத் தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது சலீம் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். கூட்டத்தில் கோத்தகிரியில் உள்ள சமுதாயக்கூடத்தை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். டானிங்டன் பகுதியில் கோடநாடு சாலையில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். கோத்தகிரி நகர் பகுதிகளில் சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். டானிங்டன் முதல் கோழியாடா வரை உள்ள பழுதடைந்த சாலையை புதுப்பிக்க வேண்டும். கோத்தகிரி பகுதியில் பெருகி வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆலோசகர் பிரவின், இணை செயலாளர் வினோபா பாப், முகமது இஸ்மாயில் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் பீட்டர் நன்றி கூறினார்.