செங்கல்பட்டு
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூருவில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வரப்படும் ஒரு ஜோடி கரடி
|விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூருவில் இருந்து ஒரு ஜோடி கரடி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. பதிலுக்கு 6 நெருப்புக்கோழிகள் வழங்கப்படுகிறது.
சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் தினந்தோறும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் விலங்குகளை பார்த்து விட்டு செல்கின்றனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரே ஒரு சிறு கரடி மட்டுமே இருப்பதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் கோரிக்கையை ஏற்று பூங்கா நிர்வாகம் கரடியின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் அனுமதி பெற்று மைசூரு உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி கரடியை வாங்குவதற்கு முடிவு செய்து அதற்கு பதில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 2 பெண், 4 ஆண் என மொத்தம் 6 நெருப்புக்கோழிகள் மைசூரு உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்க உள்ளது.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூரு உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி கரடி, இன்று (வியாழக்கிழமை) இரவு அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) காலை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்து சேரும், இந்த 2 கரடிகளுடன் சேர்த்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரடிகளின் எண்ணிக்கை 3-ஆக அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.