சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை மீட்பு..!
|சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
சென்னை,
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசாவிலிருந்து நேற்றிரவு குழந்தையுடன் வந்த நந்தினி கண்காகர் - லங்கேஸ்வர் தம்பதி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலேயே உறங்கிய நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் குழந்தை காணாமல் போனது.
இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை 2 பேர் தூக்கிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், 4 மணி நேர தேடலுக்கு பின்னர் கடத்தப்பட்ட குழந்தை குன்றத்தூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பார்த்த பெற்றோர் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
குழந்தையை கடத்திச் சென்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரபாஸ் மெண்டல், நமீதா தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.