அரியலூர்
காதலித்த வாலிபரை போலீஸ் உதவியுடன் கரம்பிடித்த நர்சிங் மாணவி
|காதலித்த வாலிபரை போலீஸ் உதவியுடன் நர்சிங் மாணவி கரம்பிடித்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமம் காளியம்மன் கோவில் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் கபிலன்(வயது 23). மெக்கானிக்கான இவர் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும், தினக்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கொளஞ்சியின் மகள் ஆனந்திக்கும்(19) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறியது. ஆனந்தி, ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். மேலும் கபிலனின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கபிலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆனந்தி புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி, இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கபிலன், ஆனந்தியை திருமணம் செய்ய மறுத்தார். மேலும் அவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கபிலனின் பெற்றோர் தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், கபிலனுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறி கோபித்து சென்றனர்.
இதையடுத்து ஆனந்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் வந்திருந்தவர்களிடம் போலீசார் அறிவுரை கூறி, இருவரும் திருமணம் செய்து கொண்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கபிலன், ஆனந்தி ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள காளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, மணக்கோலத்தில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை கூறி ஆனந்தியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோர் இடையூறு செய்தால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்தனர்.