< Back
மாநில செய்திகள்
தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்... குழந்தை வெளியே வராததால் செய்த அதிர்ச்சி சம்பவம்
மாநில செய்திகள்

தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்... குழந்தை வெளியே வராததால் செய்த அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
1 May 2024 11:39 AM IST

சென்னையில் திருமணமாகாமல் கர்ப்பமான செவிலியர், தனக்குத்தானே பிரசவம் பார்த்தபோது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் செவிலியர் வினிஷா(வயது 24). இவர் சென்னை தி.நகர் சவுத்போக் ரோட்டில் தங்கி கடந்த ஒரு வருடமாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். வினிஷாவிற்கு சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி (29) என்பவருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யாமல் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இதனால் கருத்தரித்த வினிஷா, ஏழு மாத கர்ப்பிணியாக தனியாகவே இருந்து வந்துள்ளார். நேற்று திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தானே ஒரு செவிலியர் என்பதால் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அதன்படி குளியலறைக்குச் சென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சுயமாக பிரசவம் பார்ப்பது அத்தனை எளிதல்ல என்பதை அவர் தாமதமாகவே புரிந்து கொண்டார். அதற்குள் அவரது பிரசவம் விபரீதமானது.

பிரசவ வலியை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில், சிசுவை வெளியே இழுக்க முயற்சித்தார். இதில் கையில் தட்டுப்பட்ட சிசுவின் கால்களை பிடித்து வலிய இழுத்தார். இந்த முயற்சியில் சிசுவின் கால்கள் பிய்த்துக்கொண்டு தனியே வர, குழந்தையும் இறந்தே பிறந்தது. பின்னர் குழந்தையின் கால்களை கழிவறையில் வீசிவிட்டு, இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு வினிஷாவை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்திருப்பதை உறுதி செய்தனர். அதன் சடலத்தை பத்திரப்படுத்தியவர்கள், வினிஷாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் மாம்பலம் போலீசார் செவிலியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செவிலியரின் காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செவிலியர் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முயன்றதும், அந்த முயற்சியில் குழந்தையின் கால்களை பிய்த்து அதன் மரணத்துக்கு காரணமானதும் டாக்டர்கள் உள்பட பலதரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மேலும் செய்திகள்