கடலூர்
ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி நர்சு தற்கொலை முயற்சி
|விருத்தாசலத்தில் வாலிபரின் தொந்தரவு தாங்க முடியாமல் ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி நர்சு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் மணலூரை சேர்ந்தவர் தேவா. இவருடைய மனைவி பிரியதர்ஷினி (வயது 27), நர்சு. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் மீது ஏறி நின்றார். பின்னர் அவர் கீழே குதிக்க முயன்றதாக தெரிகிறது.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் உதவியுடன் பிரியதர்ஷினியின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி மீட்டார்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பிரியதர்ஷினியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர், போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
காதல் திருமணம்
அதில், தேவாவும் நானும் காதலித்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எங்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் விவாகரத்து கேட்டுள்ளோம். அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மணலூர் காலனியை சேர்ந்த ஆகாஷ் (30)என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக என்னை அடிக்கடி பின் தொடர்ந்து வந்து உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி எனக்கு இடையூறாக இருந்து வருகிறார்.
தொந்தரவு
இதனால் என்னால் வாழ முடியவில்லை. நான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருவதால், அங்கு வந்தும் தொந்தரவு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி நர்சு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.