1000 பேர் டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் அடாவடி பயணம் செய்த வடமாநிலத்தவர்: வெளியே தள்ளிய போலீஸ்...!
|4 பேர் அமரக்கூடிய இடத்தில் 7 பேர் மூட்டை முடிச்சுகளுடன் அமர்ந்து, முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல் அடாவடி செய்துள்ளனர்.
சென்னை,
கவுகாத்தி செல்லும் பெங்களூரு விரைவு ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநிலத்தவர் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளில் மூட்டையை கட்டிக்கொண்டு ஏறியுள்ளனர். உள்ளே ஏறிய அவர்கள் டிக்கெட் எடுத்து பயணித்தவர்களுக்கு இடம் கொடுக்காமல் 4 பேர் அமரக்கூடிய இடத்தில் 7 பேர் மூட்டை முடிச்சுகளுடன் அமர்ந்து, முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல் அடாவடி செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிகள் ரெயில்வே போலீசாருக்கு புகார் தெரிவித்ததையடுத்து திருவொற்றியூரில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே அனைத்து முன்பதிவு பெட்டிகளில் ஆய்வு மேற்கொண்டு டிக்கெட் எடுக்காமல் இருந்த சுமார் 1000 வடமாநிலத்தவர்களை கண்டித்து வெளியேற்றினர்.
இந்த கூட்டத்தில் பல பெண்களும் டிக்கெட் எடுக்காமல் ஒரே சீட்டில் முடங்கிக்கொண்டு பயணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கீழே இறக்கிவிடப்பட்ட பயணிகள் அனைவரும் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தேனீ கூட்டம் போல நின்ற காட்சிகள் பரபரப்பாக இருந்தது.
மேலும், தொடர்ந்து இதுபோல் நடப்பதால், ரெயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிய டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.