கரூர்
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடமாநில தொழிலாளி சாவு
|தீ விபத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வடமாநில தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொட்டகை முழுவதும் தீ
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற முத்துசாமி. இவரது வெல்ல ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். கடந்த 13-ந் தேதி இரவு வேலை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் கொட்டகையில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் அந்த பகுதிக்கு பின்புறமாக மர்மநபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் கொட்டகையில் ஒரு அறையின் ஓரத்தில் இருந்த சிமெண்டு அட்டையை உடைத்தனர். பின்னர் அதன் வழியாக தாங்கள் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை அங்கு தூங்கி கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்கென்ட் (வயது 19) சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுகிராம் (20), யஸ்வந்த் (19) மற்றும் கோகுல் (24) ஆகிய 4 பேர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் தீ அவர்கள் 4 பேர் மீதும் மளமளவென பற்றி எரிந்ததுடன், கொட்டகை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
சிகிச்சை பலனின்றி...
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள மற்ற தொழிலாளர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் உடலில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதில் ராகேஷ், சுகிராம் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். மேலும் யஸ்வந்த், கோகுல் ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் கோவை மண்டல ஐ.ஜி.சுதாகர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேரையும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான அனைத்து உயர்தர சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோகி என்கிற ராஜேஷ்கென்ட் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை ஜேடர்பாளையம் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.