'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
|இந்த முகாமினை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
சென்னை,
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக இத்திட்டம் நாளை (31.01.2024) புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம். சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும் அன்றையதினம் மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அரசின் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது .