திருச்சி
கோரையாறு கரையை பலப்படுத்த ரூ.330 கோடியில் புதிய திட்டம்; அமைச்சர் கே.என்.நேரு தகவல்
|கோரையாறு கரையை பலப்படுத்த ரூ.330 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
விழிப்புணர்வு வாகனம்
திருச்சி மாநகராட்சியில் சர்குலர் வேஸ்ட் சொலுயூஷன்ஸ் என்னும் திட்டம் 2 புதிய முயற்சிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ரோபோட்டிக்ஸ் மூலம் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருதாய் மற்றும் மகனை போல வடிவமைக்கப்பட்ட இரண்டு ரோபோக்கள் நிலையான நகராட்சி திடக்கழிவு மேலாண்மை குறித்து உரையாடல்களில் ஈடுபடுகின்றன.
இதன் நோக்கம் குப்பைகளை தரம் பிரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளையும், முறையற்ற கழிவு மேலாண்மையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீA new project worth Rs.330 crore to strengthen the Korayar embankment; Minister K. N. Nehru informationமைகளையும் எடுத்துரைப்பதாகும். இந்த பிரசார வாகனம் 65 வார்டுகளுக்கும் அனுப்பப்படும். விழிப்புணர்வு வாகன இயக்க நிகழ்ச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், கவுன்சிலர் பைஸ்அகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல்
டெங்கு வராமல் தடுப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் யாருக்கும் ஏதேனும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அதற்கேற்றாற்போல் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எங்கேயும் அதிக அளவில் தண்ணீர் தேங்காமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதற்கான நிதி அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நின்றால் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் தற்போது கணுக்கால் அளவு தண்ணீர் நின்றால் கூட தண்ணீர் நிற்கிறது, தண்ணீர் நிற்கிறது என்கிறார்கள். அதுவும் அடுத்த அரைமணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடுகிறது. மழைக்காலம் முடியும் வரை எங்கேயும் சாலைகளை தோண்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைக்கும் பணி இன்னும் 20 சதவீதம் மட்டுமே உள்ளது. கடந்த 7 வருடமாக எதுவுமே செய்யவில்லை.
ரூ.330 கோடியில் திட்டம்
நாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்று இரண்டு வருடத்தில் சாலை, மின்விளக்கு, குடிநீர் இணைப்புகள் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம். குடமுருட்டி பகுதியில் இருந்து பஞ்சப்பூர் வரை கோரையாறு கரையை பலப்படுத்துவதற்கு ரூ.330 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் நீர்வளத்துறை சார்பில் அனைத்து ஆறுகளும் தூர்வாரப்பட்டுள்ளது. அதனால் எங்கேயும் கரைகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வீடுகளில் இருந்து பழைய துணிகளை கொண்டு வந்து அவற்றை துணிப்பைகளாக மாற்றி இலவசமாக வாங்கிச்செல்லும் துணிப்பை திருவிழா நிகழ்ச்சியையும் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்த முயற்சி திருச்சியில் உள்ள பல்வேறு தினசரி சந்தைகளில் மேற்கொள்ளப்படும். விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை குறைத்து நிலையான மாற்று பொருட்களை உபயோகிக்க உதவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.