"தமிழ்நாட்டில் புதிய தொழில் புரட்சி நடந்து வருகிறது" முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
|உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது:-
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலேண்ட் (Capitaland) குழுமத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
கேப்பிட்டாலேண்ட் முதலீட்டு நிறுவனத்தின், சர்வதேச தொழில்நுட்பப் பூங்கா, சென்னை ரேடியல் சாலைத் திட்டத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தரம் வாய்ந்த ஒரு தொழில்நுட்பப் பூங்காவை தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக இந்த நிறுவனத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் புதியதொரு தொழில் புரட்சி நடந்து கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக, ஏராளமான தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் கேப்பிட்டாலேண்ட் நிறுவனமும் இணைந்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது.
5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருக்கின்ற இந்த சர்வதேசத் தொழில்நுட்பப் பூங்காவில், 50 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகிற அளவுக்கான உலகத்தரம் வாய்ந்த அலுவலக இடங்கள் கட்டித்தர நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது இன்றைக்கு மிக மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது.
தொழில்துறையில் முதன்மை மாநிலமாக முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அது மட்டுமல்ல, இந்த வளர்ச்சி சீராகவும், பரவலாகவும் இருக்க வேண்டுமென்று மாநிலத்தில் இருக்கின்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் 9 நியோ டைடல் பார்க்குகள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கின்ற வகையில், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்துக் கொண்டு வருகிறோம். வளர்ந்து வருகின்ற துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கின்ற வகையில், துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் பெருமளவில் ஈர்ப்பதற்காக திட்டங்கள் தீட்டினோம்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கின்றோம். உங்களைப் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள்.
பல நிறுவனங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று பெருமைப்படுத்த இருக்கிறார்கள். அதற்கு முன்னதாகவே, கேப்பிட்டாலேண்ட் நிறுவனம் இந்த அதிநவீன பன்னாட்டுத் தொழில்நுட்ப பூங்காவை தொடங்கி இருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. 2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.