< Back
மாநில செய்திகள்
நாகங்குடியில் புதிதாக தரைப்பாலம் கட்டப்பட்டது
திருவாரூர்
மாநில செய்திகள்

நாகங்குடியில் புதிதாக தரைப்பாலம் கட்டப்பட்டது

தினத்தந்தி
|
13 May 2023 12:15 AM IST

நாகங்குடியில் புதிதாக தரைப்பாலம் கட்டப்பட்டது

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் நாகங்குடியில் புதிதாக தரைப்பாலம் கட்டப்பட்டது.

பழுதடைந்த தரைப்பாலம்

கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் நாகங்குடியில் பழையனூர் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்கால் வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை அந்த பகுதியில் உள்ள சாகுபடி செய்யப்படும் வயல்களுக்கு கொண்டு செல்வதற்காக நாகங்குடி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே செல்கிறது.

சாலையின் குறுக்கே பாசன வாய்க்கால் செல்வதால் சாலையின் மேல் பகுதியில் தரைப்பாலம் மற்றும் இரண்டு பக்கமும் தடுப்புச்சுவர்களும் கட்டப்பட்டது. இந்தநிலையில் நாளடைவில், சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் பழுதடைந்து காணப்பட்டது.

மண்சரிவு ஏற்பட்டு பள்ளம்

இதில் ஒரு பக்கம் உள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து விட்டது. இதனால் சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது. பள்ளம் ஏற்பட்ட இடம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டாலும், அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் பெரிய அளவில் ஏற்பட்டது. மேலும் பள்ளம் ஏற்பட்ட இடம் ஆபத்தான வளைவு என்பதால் மன்னார்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருவாரூர், கொரடாச்சேரி, கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு சென்று வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, கனரக வாகனங்கள் பழுதடைந்த தரைப்பாலத்தை கடந்து சென்று வர மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

'தினத்தந்தி' செய்தி எதிரொலி

இதனால் பழுதடைந்த பாசன வாய்க்கால் தரைப்பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாகங்குடியில் சாலையின் குறுக்கே புதிதாக தரைப்பாலம் கட்டி தந்தனர். தரைப்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்