பெரம்பலூர்
அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்; மாணவர்களின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
|அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரி மாணவர்களின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
அதில், 1962-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளியின் ஓட்டு கட்டிடத்தால் தற்போது மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அங்குதான் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் அந்த ஓட்டு கட்டிடம் ஒழுகி மழைநீர் வகுப்பறையில் தேங்குகிறது. 61 ஆண்டுகள் பழமையான அந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டிக்கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
மொத்தம் 301 மனுக்கள்
குன்னம் தாலுகா, ஆண்டிக்குரும்பலூர் கிராம மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வைத்தீஸ்வரர் கோவிலின் முன்பு மெய்க்காவல் வேலை பார்த்த ஒருவர் கோவில் நிலத்தை தனது பெயரிலும், சகோதரர் பெயரிலும் பட்டா மாற்றிக்கொண்டார். அந்த நிலத்தை மீண்டும் கோவில் பெயருக்கு பட்டா மாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். குன்னம் தாலுகா ஆய்க்குடி கிராம மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், எங்கள் கிராமத்தில் தற்போதும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் பக்கத்து கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய எங்கள் கிராமத்தில் 2 இடங்களில் குடிநீர் கிணறுகள் வெட்டப்பட்டு வருகிறது. இதனால் எங்கள் கிராமத்தில் மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வெட்டப்படும் குடிநீர் கிணறுகளை எங்கள் கிராமத்திற்கு பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் குடிநீர் கிணறுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 301 மனுக்கள் பெறப்பட்டது.