< Back
மாநில செய்திகள்
புகார் மனுக்களுக்கு தீர்வு காண புதிய கண்காணிப்பு செயலிபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தொடங்கி வைத்தார்
கடலூர்
மாநில செய்திகள்

புகார் மனுக்களுக்கு தீர்வு காண புதிய கண்காணிப்பு செயலிபோலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
21 April 2023 12:15 AM IST

கடலூர் மாவட்டத்தில் புகார் மனுக்கள் மீது தீர்வு காண்பதற்காக புதிய கண்காணிப்பு செயலியை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தொடங்கி வைத்தார்.

புதிய செயலி

கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் மனுதாரர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும், போலீஸ் உயர் அதிகாரிகள் உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ளும் வகையிலும் புகார் மனுக்கள் கண்காணிப்பு அமைப்பு என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த செயலியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தனது அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த செயலியை போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து, போலீஸ் நிலையங்களில் புகார் மனு சம்பந்தமாக விவரம் தெரிந்து கொள்ள முடியும்.

நடவடிக்கை

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனியாக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு, போலீசார் புதிய செயலியை தொடர்ந்து கண்காணித்து முதல் தகவல் அறிக்கை, மனு ரசீது, பதிவு செய்த விவரம், ஆஸ்பத்திரிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் சட்டபடியான உரிய நடவடிக்கைகள், விசாரணை அதிகாரிகள், மனுதாரர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

இதன் மூலம் போலீஸ் நிலையத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி, குறித்த காலத்திற்குள் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேம்பட்ட சேவை

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நிருபர்களிடம் கூறுகையில், போலீஸ் நிலையங்களில் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? அல்லது கைவிடப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி போலீஸ் நிலையங்களில் உள்ள வரவேற்பாளர்களுக்கு வழங்கப்படும் கணினி மூலம், பெறப்படும் மனுக்களின் தகுதி, விவரத்தை பதிவு செய்வார்கள். இந்த மனுக்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நடவடிக்கை திருப்தியாக உள்ளதா, திருப்தி இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும். மக்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டி வருவோர் மீது 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் விபத்து உயிரிழப்புகள் குறைந்து வருகிறது. சேதமடைந்த கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சபியுல்லா, கரிகால்பாரிசங்கர், அசோகன், தேவராஜ், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்