சென்னை
சென்னை தீவுத்திடலில் ராட்டினத்தில் சிக்கி நேபாள வாலிபர் படுகாயம்
|சென்னை தீவுத்திடலில் ராட்டினத்தில் சிக்கி நேபாள வாலிபர் படுகாயமடைந்தார்.
சென்னை தீவுத்திடலில் தனியார் பொழுதுபோக்கு கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு ராட்டினம் ஒன்று பழுதடைந்தது. அந்த ராட்டினத்தை சரிபார்பதற்காக நேபாளத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 34) என்பவரை ராட்டினத்தின் ஆபரேட்டர் வினோத் அழைத்து வந்தார். ராம்குமார் ராட்டினத்தின் அடியில் அமர்ந்து பழுதுபார்த்து கொண்டிருந்தார். இந்தநிலையில் ராம்குமார் ராட்டினத்தை மேலே தூக்குவதற்கான சுவிட்சை ஆன் செய்யுமாறு வினோத்திடம் கூறினார். வினோத் தவறுதலாக ராட்டினத்தை சுற்றுவதற்கான சுவிட்சை ஆன் செய்தார். இதனால் ராட்டினத்தின் ஒரு பகுதி ராம்குமார் மேல் வேகமாக மோதியது. இதில் ராம்குமார் மயங்கிய நிலையில் கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ராம்குமாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருவல்லிகேணி உதவி கமிஷனர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.